ஆமணக்கு...
முத்துகொட்டை, சித்திகரம், ஏரண்டம் என்ற வழக்கு பெயர்களாலும் Castor என்ற English பெயராலும் Ricinus communis என்ற தாவரவியல் பெயரையும் கொண்ட இதில் சித்தாமணக்கு (சிற்றாமணக்கு) பேராமணக்கு என்ற இரண்டு வகைகள் இருந்தாலும் பயன்கள் ஒரேமாதிரிதான்.
ஆமணக்கு செடியில் விளையும் வித்துகளுக்கு முத்துகொட்டை என்று பெயர் இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் விளக்கு ஏற்ற பயன்படுவதால் விளக்கெண்ணெய் என்ற பெயர். விளக்கெண்ணெய் உற்பத்தியில் உலகளவில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விளையும் முத்துகொட்டை சந்தையில் தனிசிறப்பானது விலையும் அதிகம். இந்திய கல்வெட்டுகளில் கோவில் நித்தியபடிகளுக்கும் வீதியில் வைக்கும் தீவட்டிகளுக்கும் வண்டி சக்கரங்களுக்கு மசகாக நெய், விளக்கெண்ணெய் கொடுத்த செய்திகள் நிறைய கிடைத்திருக்கிறது. விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், கடலையெண்ணெய், நல்லெண்ணெய் நான்கு மட்டுமே தென்னிந்திய கலாச்சாரத்தில் ஆதியிலிருந்தே இருந்திருக்கிறது பாதியில் வந்து தேங்காய் எண்ணெய்யும் சேர்ந்திருக்கிறது. கடந்த முப்பது நாற்பது வருடங்களுக்கு பின்பே மற்ற எண்ணெய்கள் சந்தைக்கு வந்திருக்கிறது.
சமூலமாக மருந்துகளுக்கு பயன்பட்டாலும் எண்ணெய் மட்டுமே பிரதானம் Albendazole மாத்திரைகள் சந்தைக்குவராத காலத்திலிருந்து இன்றுவரை பேதிக்கு குடிக்கும் அனைவருக்கும் சித்தமருத்துவம் சொல்லும் முதலாவது மருந்து இதுவே. வாழை இலையைபோல சாப்பிட இந்த இலையை பயன்படுத்தலாம் இலைமேல் படிந்திருக்கும் மெழுகு செரிமான பிரச்சினைகளை சரிபடுத்தும். மாதவிடாய் கால பெண்களும் வெயிலில் வேலைசெய்பவர்களும் இலைகளை கொங்கட்டான் (தொப்பியை போல) செய்து மாட்டிக்கொள்வார்கள் இதனால் உடல் சூடு சமப்படும். பால் சுரப்பில் குறைபாடுள்ள பெண்கள் மார்பகங்களுக்கு இலையை வைத்துகட்ட பால்சுரப்பு அதிகமாகும்.
வித்துகளை நேரடியாக செக்காட்டி எடுக்கும் எண்ணெய்க்கு பச்சை எண்ணெய் என்றும் இடித்து வேகவைத்து சேகரிக்கும் முறைக்கு ஊத்துன(ஊற்றின) எண்ணெய் என்றும் பெயர். ஓடுநீக்கிய விதைகளை மாவில் சேர்த்து அரைத்தால் சமையல் சோடா (Sodium bicarbonate) தேவைபடாமல் இட்லி தோசை செய்துவிடலாம் அம்மா பல வருடங்களாக வீட்டில் பயன்படுத்தி வருகிறார். பயிர்களில் புச்சிகளை கட்டுபடுத்தும் பொறிதாவரமாகவும் சால்விடவும் பயன்படும்.
வீடுகளில் வளர்வதை அபசகுனமாக நினைப்பார்கள். கட்டபொம்முவை தூக்கேற்றிய பின்பு அவரின் கோட்டையை தரைமட்டமாக்கி கம்பெனியார் அங்கு எள்ளும் ஆமணக்கும் விதைத்ததாக நாட்டார் வழக்கு கதைகள் சொல்கிறது...
No comments:
Post a Comment